திங்கள், அக்டோபர் 24, 2011

.



விட்டில் பூச்சிகளாய் வீட்டு பணிப் பெண்கள்.

சமீபத்தில் ஒரு இளம்பெண் நைட்டியுடன் சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்திறங்கியதைக் கண்டு விமான நிலையத்தில் இருந்த பிறப் பயணிகள் அவரை சூழ்ந்து கொண்டனர். விமான நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்து அப்பெண்ணை அணுகி விசாரித்ததில் அதிர்ச்;சி அடைந்தனர். 

அப்பெண்ணின் பெயர் ரேவதி என்றும் வயது 25 சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மருதன்கோன் கிராமம் என்றும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் சிங்கப்பூருக்கு பணிப்பெண்;ணாக சென்றுத் திரும்பி இருப்பதை அவரது கையில் இருந்த பாஸ்போட்டின் மூலம் போலீஸார் தகவல் தெரிந்து கொண்டனர்.

மூன்று வருடங்கள் கழிந்து தாயகத்திற்கு திரும்பிய அந்தப் பெண்ணின் கையிலிருந்த பாஸ்போர்ட்டைத் தவிற வேறெதுவும் இல்லை.  

அங்கு அப்பெண்ணுக்கு என்ன நடந்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு புத்தி பேதலித்து உள்ளார் அதனால் போலீஸார் கேட்ட எந்தக் கேள்விக்கும் சரியாக பதிலளிக்க முடியாமல் முன்னுக்குப் பின் முரனாகப் பேசி உள்ளார்.

வளைகுடாவிலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும் வந்த ஏராளமானப் பயணிகள் தாங்கள் வேலை செய்யும் நாடுகளில் வீட்டுப்பணிப்பெண்களுக்கு நேரும் அவலங்களை பேசிக்கொண்டு அது மாதிரி இந்தப் பெண்ணுக்கும் எதாவது நேர்ந்து இருக்கலாம் அதனால் மனநிலை பாதித்திருக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்திருக்கின்றனர்.

அப்பெண்ணின் நிலையை அறிந்த போலீஸார் அப்பெண்ணின் பாஸ்போட்டிலிருந்த முகவரிக்கு தகவல் கொடுக்கபட்டதும் விரைந்து வந்த அப்பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் மகளின் கோலத்தைக் கண்டு கட்டி அனைத்து அழுது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதில் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ?

சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களை அதிகமாக வேலை வாங்குவதாகவும், முறையான சம்பளம் தர மறுப்பதாகவும், சிறுவயதுடைய பெண்களை பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுத்தப் படுவதாகவும் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு  கடந்த 2007ல் இந்தியாவிலிருந்து வீட்டு வேலைக்காக பெண்களை தேர்வு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு மத்திய அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்து சவுதி அரோபியா, ஐக்கிய அரப் எமிரேட்ஸ், பஹ்ரைன், கத்தார், ஓமன், குவைத், லிபியா, ஜோர்தான், சூடான், ஏமன், சிரியா, லெபனான், புருனே, ஆப்கானிஸ்தான், இந்தோனேஸியா, மலேசியா, ஆகிய 18 நாடுகளில் இயங்கும் இந்திய தூதரங்கங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது.

மேற்காணும் 18 நாடுகளில் யாருக்கு இந்தியாவிலிருந்து வீட்டு பணிப்பெண்; தேவைப்படுகிறதோ அவர் விசா பெற்றதும் அந்த நாட்டில் இயங்கும் இந்திய தூதரகத்தில் சென்று அந்த பணிப் பெண்ணிற்காக 2500 டாலர் காப்புத் தொகை செலுத்தி 400 யு.எஸ். டாலர் சம்பளம் தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டு, 30 வயதை கடந்த பெண்ணை தேர்வு செய்து கொள்ள வேண்டும்;, அப்பெண் வந்த உடன் மொபைல் போன் கொடுத்து நம்பரை இந்திய தூதரகத்திடம் கொடுக்க வேண்டும், அப்பெண்ணுக்கு உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக எதாவது தொந்தரவு கொடுத்தால் அப்பெண் உடனடியாக தூதரக அதிகாரியை தொடர்புகொண்டு புகார் செய்ய வேண்டும், புகாரின் அடிப்படையில் இந்தியதூதரக அதிகாரியால் விசாரிக்கப்பட்டு அந்த நாட்டின் லேபர் கோர்ட் மூலம் நடிவடிக்கை எடுக்கப்படுவார் என்றும் இன்னும் ஏராளமான கட்டுப்பாடுகள் அடங்கிய ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்திட்டப் பின்னரே இந்தியாவிலிருந்து வீட்டு பணிப்பெண் கொண்டு வரமுடியும் என்ற சட்டம் நவம்பர் 2007 முதல் தேதியிலிருந்து அமலில் உள்ளது.

அமலில் இருந்து என்ன செய்வது ? வீட்டு துப்புரவுப் பணிக்காக வெளிநாடுகளுக்கு வரும் பெண்கள் நூற்றுக்கு நூறு சதவிகிதம் அடிப்படை கல்விக் கூட கற்காதவர்கள் என்பதால் மேற்காணும் சட்ட திட்டங்கள் எதுவும் அவர்களுக்குத் தெரிவதில்லை, ஆனால் இது பத்திரிகையில் செய்தியாக வெளி வந்ததை நன்கு அறிந்துள்ள ஏஜெண்டுகள் பணத்திற்காக இந்த அப்பாவிப் பெண்களை பலிகடா ஆக்குகின்றனர்.

வீட்டு பணிப் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை இயற்றி 18 நாடுகளின் இந்திய தூதரகங்களுக்கு தகவல் அனுப்பிய மத்திய அரசு இந்திய நாட்டின் விமான நிலையங்களின் குடியேற்ற அதிகாரிகளுக்கு அனுப்பி நடைமுறைப் படுத்த உத்தவு பிறப்பிக்க வில்லை அதனால் பாஸ்போட்டில் விசா, குடியுரிமைப் போன்றவைகளை சோதனை செய்யும் விமான நிலைய குடியேற்ற அதிகாரிகள் வீட்டு வேலைக்காக செல்லும் பணிப் பெண்களுக்காக மேற்காணும் 2500 டாலர் காப்புத்தொகை செலுத்தப்பட்டிருக்கிறதா ? மேற்காணும் புதிய சட்டத்தின் படி இந்தியத் தூதரகத்தில் ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்திடப் பட்;டுள்ளதா ? என்பதை ஆய்வு செய்வதில்லை.

அதனால் வீட்டு பணிப்பெண்களுக்கான பாதுகாப்பு சட்டம் இயற்றப்டுவதற்கு முன் இருந்த அவல நிலையே இதுவரை நீடிக்கிறது.


படிப்பறிவில்லாத அப்பாவிப் பெண்கள் இதுதான் நம் தலை எழுத்து என்று நினைத்து எஜமானிகள் கொடுக்கும் வேலை சம்மந்தமான தொந்தரவுகளை உடல் ரீதியாக தாங்கிக் கொள்கின்றனர், சில சேடிஷ்டு எஜமானர்கள் கொடுக்கும் பாலியல் தொந்தரவுகளை மன ரீதியாக சகித்துக் கொள்கின்றனர். ஒரு அளவு தான் மன ரீதியாக சகித்துக் கொள்ளவும், உடல் ரீதியாக தாங்கிக் கொள்ளவும் முடியும் வரம்பைக்கடந்து விடும் பொழுது மனநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது.

இதில் இன்னும் கொடுமை என்ன வென்றால் ? சிலர் தங்களுடைய வீட்டிற்காக பணிப்பென் விசா அப்ளை செய்வதுடன், சேர்த்தே வாகன ஓட்டுனர் விசாவும் அப்ளை செய்வார்கள் அது இரண்டும் கிடைத்ததும் ஏஜண்டுகளிடம் கொடுத்து கணவன் மனைவியாக கேட்கின்றனர். 

யாரும் தங்களுடைய பிள்ளைகளை எவரிடமும் விட்டு விட்டு இவ்வாறு கணவன் மனைவியாக வெளிநாடு செல்வதில்லை விசா கொடுப்போர் இதை நல்ல நோக்கத்தடன் செய்தாலும் இந்த நல்ல நோக்கம் நடைமுறை சாத்தியமற்றது.

ஏஜென்டுகள் தங்கள் கையில் கிடைத்த எந்த விசாவையும் ஸ்டாம்பிங்க் பண்ண முடியவில்லை என்றுக் கூறி திருப்பி கொடுக்க மாட்டார்கள் போலி சான்றிதழ் தயார் செய்து என்ன மாதிரியான கேட்டகிரி விசாவையும் ஸ்டாம்பிங்க் பண்ணி விடுவார்கள். அதைப் போலவே போலி திருமண சான்றிதழ் தயார் செய்து கணவன் மனைவி அல்லாத வௌ;வேறு ஆண், பெண்களை கணவன், மனைவியாக அனுப்பி விடுகின்றனர்.

விசையில் சிக்கிக் கொண்ட எலியைப் போல் வாகன ஓட்டுனரின் கிடுக்கிப் பிடியில் சிக்கிக் கொள்ளும் இந்தப் பெண்கள் அவராலும், பிறராலும் படும் பாலியல் அவஸ்தைகளை சொல்லி மாளாது. இதுப்போன்ற அப்பாவிப் பெண்களே ரேவதி போன்ற மனநிலை பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள்.

இத்தனை சித்ரவதைகளை அனுபவித்துக் கொண்டு இந்த சிறிய சம்பளத்திற்காக இந்தப் பெண்கள் இளம் வயதில் வெளிநாட்டு மோகத்தில் விளக்கின் மீது விழும் விட்டில் பூச்சிகளாய் ஆக வேண்டுமா

தங்கள் மகளை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களே சிந்தியுங்கள், தங்கள் சகோதிரியை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் சகோதரர்களே சிந்தியுங்கள், தன் மனைவியை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் கணவன் மார்களே சிந்தியுங்கள், இதையும் மீறி வேறு வழியில்லாத நிலையில் வெளிநாட்டிற்கு வந்து சிக்கிக்கொள்ளும் அபலைப் பெண்களின் அவலநிலையை அறிந்தால் சமுதாய சிந்தனை கொண்ட சகோதரர்கள் உடனே அங்கு இயங்கும் இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்து அப்பெண்களை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்.

அவ்வாறு செய்தால் ரேவதிப் போன்று மனநிலை பாதிக்கப்படுவதற்கு முன் காப்பாற்றி விடலாம்.


 உணர்வுக்கு எழுதிய கட்டுரை





وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்