புதன், அக்டோபர் 12, 2011

.

மீண்டும் தலை தூக்கிய 
தடைசெய்யப்பட்ட தற்காலிக திருமணம்.


மார்க்கத்தை விற்று வயிறு வளர்க்கும் சில இஸ்லாமிய பெயர் தாங்கிகளின் செயல்பாடுகளால்  அவ்வப்பொழுது இஸ்லாத்திற்கு களங்கம் ஏற்படுவதும் இதனால் ஒட்டு மொத்த முஸ்லீம்களும் தலை குணிவதுமுண்டு .

அதன் வரிசையில் சமீப காலமாக ஆந்திர மாநிலத்தின் முஸ்லீம்கள் அதிகம் வாழும் ஹைதாரபாத்தில் இளம் வயதுப் பெண்களை வெளிநாட்டு மாணவர்களுக்கு சுமார் 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை மஹர் என்றப் பெயரில் கையூட்டுப் பெற்றுக் கொண்டு 20 ரூபாய் பத்திரத்தில் படிப்பை முடித்துவிட்டு தாயகம் செல்கின்றவரை இத்தனை வருடத்திற்கு என்று எழுதி சாட்சி கையெழுத்துடன் தற்காலிக திருமணம் முடித்துக் கொடுக்கின்றனர். சம்மந்தப்பட்ட மாணவர்கள் படிப்பை முடித்து விட்டு தங்களுடைய தாயகத்திற்கு செல்வதற்கு முன் விவாகரத்து செய்து விடுவார்கள் விவாகரத்து செய்ய மறுத்தால் பத்திரத்தைக் காண்பித்து கோர்ட்டிலிருந்து விவாகரத்துப் பெற்று விடுவார்கள்.

இந்த திருமணத்தை அந்த மாணவர்களும் பெண் குடும்பாத்தாரும் மட்டும் ரகசியமாக செய்து கொள்வதில்லை மாறாக சம்மந்தப்பட்ட முஹல்லா காஜிகளே செய்து வைக்கின்றனர். இதேப் போன்று கடந்த காலங்களில் வளைகுடா ஷேக் மார்களுக்கு ( அதிகம் வயதானவர்களுக்கு சிறுமிகளை ) தற்காலிக மற்றும் நிரந்தர திருமணம் செய்து வைத்தனர் இதை அரசுடைய கவனத்திற்கு கொண்டு சென்றப் பின் அரசு இந்த திருமணத்தை தடைசெய்து மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. அப்பொழுது சற்று அடங்கி இருந்த மேற்படி பெண் புரோக்கர்கள் இப்பொழுது வெளிநாட்டு இளம் வயது மாணவர்கள் மூலமாக தலை தூக்க ஆரம்பித்து விட்டனர். 

சமீபத்தில் 16 வயது பெண்ணை அவரது தாய், தந்தையரின் சம்மதத்தின் பேரில் சூடான் நாட்டைச் சேர்ந்த 25 வயது மாணவர் ஒருவருக்கு தற்காலிக திருமணம் செய்து வைத்துள்ளனர் இது டுபாகூர் திருமணம் என்பதை அறிந்து வைத்திருந்த மாணவர் தனது தற்காலிக மனைவியை தனது சக மாணவர்களுக்கும் விருந்தாக்கி உள்ளார்.

இவர்களின் கோரப் பிடியிலிருந்து ஒருவாறு அப் பெண் தப்பித்து தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய பெற்றோரிடம் செல்லாமல் போலீஸில் தஞ்சம் புகுந்து தன்னை காப்பாற்றும்படி கோரிக்கை வைக்க இப்பொழுது அப்பெண்ணிய் பெற்றோர், தரகர், திருமணம் செய்து வைத்த உள்ளூர் காஜி அனைவரும் சிறைக் கம்பிகளை எண்ணுகின்றனர்.



இப்படி ஒரு தற்காலிக திருமணம் எனும் வழக்கம் (முத்ஆ திருமணம்) என்றப் பெயரில் அரேபிய நாட்டில் உருவானதாகும் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டார்கள்.

கைபர் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'முத்அத்துன்னிஸா.''.. (கால வரம்பிட்டுச் செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் என்றும், நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள். நூல்: புகாரி 4216. ஆறிவிப்பாளர்: அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்கள். 

ஆனால் ஷியாக்கள் இதை பின்பற்றி வருகின்றனர் இன்றளவும் இது ஈரானில் நடைமுறையில் இருந்து வருகிறது இதைப் பின்பற்றியே ஹைதராபாத்தில் நீண்ட காலமாக இந்த தற்காலிக (முத்ஆ) திருமணம் ஏழை முஸ்லீம்களிடம் பணத்தாiசை காட்டி சில பெண் புரோக்கர்களால் நடத்தி வைக்கப்படுகிறது. இது ஒரு வகை விபச்சாரம் என்பதை நன்கு அறிந்திருந்தக் காரணத்தினாலேயே ஒன்றுக்கு மேற்பட்டவர்களை இதில் ஈடுபடுத்துகின்றனர் விபச்சாரத்திற்கு என்ன தண்டனை என்பதை இதில் ஈடுபடுகிற அவைரும் அறிவர்.

இதில் 16 வயதிற்குட்பட்ட சிறுமிகளை ஈடுபடுத்தும் பொழுது மட்டும் தான் அரசு தலையிடுகிறது 18 வயதிற்கு மேற்பட்ட மேஜர் பெண்கள் இன்றளவும் இதிலிருந்து விடுபட முடியவில்லை காரணம் இதை எங்கள் மதம் அனுமதித்திருக்கிறது மத விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்றுக் கூறி நழுவி விடுகின்றனர். 



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்